Thursday 31 October 2013

தம்பிக்கலை அய்யன் வரலாறு

பழங்காலம் முன்பாக தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். 

ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது.

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் தம்பிக்கலை அய்யன் பாரஸ்ட் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும் ,நாகதோஷம்,கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும். இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால் இடப்புறம் சென்றால் நாகேஸ்வரியின் சன்னதி உள்ளது. நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். 

சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு .

 தம்பிக்கலை அய்யனே சூட்சம நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.நாகேஷ்வரி ஆலயம் முடித்து சென்றால் வேப்பில்லையால் அடித்து திருநீரு மந்திரித்து தீர்த்தம் வரும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இங்கு தம்பிக்கலை அய்யன் சிவனுக்கு அபிஷேகம் செய்வது அழகானது. 

பின்னர் கள்ளி மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் சன்னதி உள்ளது.பின் கோவில் வலம்வர கருப்பணசாமி சன்னதி அதன் அருகில் அழகான மரங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. திருக்கோவில் உள்பிரகாரம் அழகானது. நேர்த்தியாக செதுக்கப்பட்ட சித்தர்கள் சிலைகளுடன் முற்றிலும் கருப்பு சலவைக்கற்களால் அழகு படுத்தி இருப்பது சிறப்பு. உள்மண்டபத்தில் கோபுரத்திற்கு மேல் ஒர் கோபுரம் அமைந்திருப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும் .திருக்கோவிலின் உள்ளே மூலவராக தம்பிக்கலை அய்யன் சிலையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார் .

தம்பிக்கலை ஐயன்

ஈரோடு -சத்யமங்கலம் ரோடில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐயனின் ஆலயம் பற்றிய கதை இது.

தம்பி கவுண்டர் என்ற மிகப் பெரிய ஜமீந்தார் அங்கு இருந்தார். அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்பதற்கு அவருடைய சகோதரர் நல்லாயன் என்பவர் அழைத்துச் செல்வார். ஒரு நாள் அந்த கால் நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லாயன் கண்டார்.அடுத்த நாள் அதை கண்காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு பாபு புற்றின் மீது நின்று கொண்டது. அதில் இருந்த நாகப் பாம்பு அதன் பாலை குடித்துக் கொண்டு இருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லாயன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவனை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி மறுநாள் அனைவரும் தம்பி கவுண்டரின் தம்பியான நல்லாயனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர். அங்கு நடந்த காட்சியைக் கண்டு பிரமித்தனர். தம்பி கவுண்டர் அநியாயமாக தனது தம்பியை அடித்து விட்டேனே என வருந்தினார். அவரை மற்ற உறவினர் தேற்றினார்கள். அன்று இரவு தம்பி கவுண்டரின் கனவில் அந்த பாம்பு தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அப்படி செய்தால் அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாக உறுதி கூறியது. ஆகவே அன்றுஇரவே தம்பி கவுண்டர் அந்த புற்றின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து வெளிவர மறுத்தார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.

அவரை கேலி பேசிய ஒரு மலையாள மந்திரவாதி அவர் சிஷ்யரானார். அது போல ஒரிஸ்ஸாவை ஆண்டு வந்த விஜய கர்ணா என்ற மன்னன் அவர் சிஷ்யரானார். ஒரிஸ்ஸாவில் இருந்து ஒரு வணிகர் தன்னுடைய பேச முடியாத மகளை அங்கு அழைத்து வர அவள் பேசத் துவங்கினாள். அவந்தியில் இருந்து வந்த ஒரு பிராமணக் குருடனுக்கு கண் பார்வை தந்தார். பல காலம் பொறுத்து தம்பி கவுண்டர் இறந்து போக அவரை தெய்வமாகக் கருதி அவரை தம்பி கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர். 

ஆலயத்தில் தம்பி கலை ஐயன் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க நாகேஸ்வரி அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளாள். அந்த ஆலயத்தில் பல பாம்புகள் சுற்றித் திரிகின்றன . ஆனால் அவை எவரையும் பயமுறுத்துவதில்லை. அங்கு உள்ள பாம்புகளின் எதிரிகளான மயில்கள் கூட பாம்புகளை ஒன்றும் செய்வது இல்லை. நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பின் புறம் நாகலிங்க ஆலயம் உள்ளது. அதன் அபிஷேக நீரை பருகினால் தோல் வியாதிகள் குணமாகி விடுமாம். அது போல பாம்பு கடித்து விட்டவர்களை அங்கு கொண்டு வந்து தம்பி கலை ஐயன் எதிரில் வைக்க அவர்கள் குணமடைகின்றார்களாம் . மணமாகாதவர்கள் நாகேஸ்வரியை வந்து வேண்டிக் கொள்ள திருமணம் ஆகுமாம். தம்பி கலை ஐயன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் அவர் தம்பி நல்லாயனுக்கும் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு பசு பாம்புக்கு பால் வார்ப்பது போன்ற சிலை உள்ளது. பாம்பாட்டி சித்தர், கணபதி, சங்கர நாராயணன், சிவன், விஷ்ணு, திருமூலர் மற்றும் கருப்பண்ணச்சாமிக்கும் ஆலயங்கள் உள்ளன.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தம்பி கலை ஆலயத்துக்கு நிறைய மக்கள் வருகின்றார்கள். பங்குனி உத்திரத்தின் முன் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரை அந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். விழாவின் ஆரம்பத்தில் உற்சவர் சிலைகளை பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரும் நீரால் முதல் நாள் அபிஷேகம் செய்கின்றனர். அடுத்த ஆறு நாட்களும் பொங்கல் படைகப்படுகின்றது. கருப்பச்சாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகின்றது. பெரிய மாட்டுச் சந்தையும் நடைபெறுகின்றது. கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன